Friday, December 05, 2008

நான்கு கடமைகள்!




உலகில் வாழும் எல்லோருக்கும் நான்கு கடமைகள் இருப்பதாகப் பாரதியார் கூறுகிறார். இறைவணக்கம் நான்காவது கடமை தான் - முதல் கடமையாகக் கூறவில்லை. முதல் கடமை தன்னைக் கட்டுதல் தான்.

கடமை ஆவன: தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடைமுடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா யெஹோவா என தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெங்கும் காக்கும் 'ஒருவனை'ப் போற்றுதல்
இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும்
கடமை எனப்படும் பயன் இதில் நான்காம்
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே
தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்
மணக்குள விநாயகா வான்மறைத் தலைவா
தனைத் தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
அசையா நெஞ்சம் அருள்வாய் உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி நின் இருதாள்
பணிவதே தொழில் எனக் கொண்டு
கணபதி தேவா வாழ்வேன் களித்தே!

'யா காவார் ஆயினும் நா காக்க' என்றார் வள்ளுவர். பாரதியும் முதல் கடமையாகத் தன்னைக் கட்டுவதைச் சொல்கிறார். தன்னைக் கட்டுதல் என்றால் என்ன? ஒன்றுமே செய்யாமல் இருப்பதா? அந்நிலை உயிருடன் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆகுமா? உயிருடன் இருக்கும் வரை மனம் நினைத்துக் கொண்டே இருக்கும்; புலன்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும்; உள்ளுறுப்புகளும் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும். அதனால் உயிருடன் இருக்கும் வரை ஒன்றுமே செய்யாமல் இருப்பது என்பது இயலாத ஒன்று தான். அப்படியென்றால் 'தன்னைக் கட்டுதல்' என்றால் என்ன? எனக்குத் தெரியவில்லை. குருமுகமாகத் தான் அறிந்து கொள்ள வேண்டும் போல. கண்ணன் கீதையில் சொன்னது போல் அறிவுடையோரிடம் பணிவுடனும் பணிவிடையுடனும் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

இரண்டாவது கடமை? பிறர் நலம் வேண்டுதலா? இல்லை. பிறர் துயர் தீர்த்தலே இரண்டாவது கடமை. பிறர் துயர் கண்டு இரங்கி அவருக்கு உதவி செய்து அவர் துயர் தீர்க்கும் 'செயலை'ச் செய்யச் சொல்கிறார். 'சொல்லுதல் யார்க்கும் எளிய' - எத்தனை எத்தனையோ கருத்துகளைத் தினம் தினம் பதிவுகளில் எழுதிக் கொண்டே செல்லலாம். அதனைப் படித்துப் பலரும் பெருமையாக நம்மைப் பற்றிப் பேசலாம். சும்மா பேசிக் கொண்டே இருந்தால் போதுமா? செயலில் அந்த கருத்துகள் வர வேண்டாமா? மற்றவர் துயரைப் பற்றி பேசுவதை விட அவர் துயர் தீர்க்கும் செயல்கள் செய்வதே முதன்மையானது அல்லவா? அதனால் தான் அதனை இரண்டாவது கடமையாகச் சொன்னார் போலும். ஆனால் நாம் அவர் சொன்ன இந்த இரண்டாவது கடமையை எப்போதாவது தான் செய்கிறோம். அதற்குப் பதிலாக மூன்றாவது கடமையாகச் சொன்ன 'பிறர் நலம் வேண்டுதலை'ச் செய்து விடுகிறோம்.

மூன்றாவது கடமையான 'பிறர் நலம் வேண்டுதலும்' வேண்டும் தான். ஆனால் அது பிறர் துயர் தீர்க்கும் செயல்பாட்டைக் கொஞ்சமேனும் செய்த பிறகு வர வேன்டியது. பிறர் நலம் வேண்டும் தூய மனம் உடையவர்கள் எல்லோரும் பிறம் துயர் தீர்க்கும் செயல்களைச் செய்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேன்டும்.

இம்மூன்று கடமைகளுக்குப் பின்னர் தான் 'பல பெயர் பல உருவம்' கொண்டு இலகும் உலகமெல்லாம் காக்கும் 'ஒரு பொருளை' போற்றும் கடமையைச் சொல்கிறார்.

கடமையைச் செய்தால் போதும்; பயன் எண்ணாமல் செய்ய வேண்டும் என்றொரு வழக்கு இருக்கிறது. பயனை அறியாமல் கடமையைச் செய்ய இயலுமா என்னில் இயலாது என்பதே பதிலாக இருக்கும். எந்தச் செயலைச் செய்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பயன்களைத் தெரிந்து கொண்டே செய்ய வேண்டும். அப்படியென்றால் கீதை சொல்வது? கீதை பயனை அறிந்து கொள்ளாமலோ பயனை எண்ணாமலோ கடமையைச் செய்யச் சொல்லவில்லை. அப்படியா? அப்படியென்றால் கீதை என்ன சொல்கிறது? அறிவுடையோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பயனை அறிந்தே கடமையைச் செய்ய வேண்டும் என்பதால் இந்தப் பாடலில் இந்நான்கு கடமைகளின் பயனைச் சொல்கிறார் பாரதியார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பயன்கள் தான் அவை நான்குமாம்.

தன்னை ஆளுதல் முதல் கடமை என்று சொன்னவர் அடுத்துத் தலைகீழாக தன்னை ஆளும் சமர்த்தை கொடுக்க வேண்டும் என்று இறைவனையே வேண்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் வணங்கமுடியும் என்ற ஆன்றோர் வாக்கியத்தை அறிந்தவர். அதனால் தான் தன்னைக் கட்டுதலும் அவன் அருளாலே தான் நிகழும் என்று அறிந்து அதனை வேண்டுகிறார். அந்தத் தன்னைத் தான் ஆளும் திறன் வந்துவிட்டால் போதுமே; எல்லாப் பயன்களும் தானே விளைந்துவிடுமே.

மணக்குள விநாயகா வான்மறைத் தலைவா எமக்கும் எம் நண்பர்கள் அனைவருக்கும் அந்த வான் பொருளையே நல்குவாய்!

Tuesday, October 07, 2008

பாரதியாரின் விஜயதசமிப் பாட்டு


"அப்பா அப்பா. இந்த நவராத்திரி நேரத்துல ஒரு நல்ல பாட்டா அம்மன் மேல பாடுங்க அப்பா. அதைக் கத்துக்கிட்டு இவங்க வீட்டு கொலுவுல பாடணும்"

"ஆமாம் மாமா. நானும் அந்தப் பாட்டைக் கத்துக்கறேன் மாமா"

"ஓம் சக்தி!

தங்கம்மா. பொன்னுரங்கம். உங்கள் ஆசை அன்னை பராசக்தியின் ஆசை அல்லவா? இதோ உடனே ஒரு பாடலைப் பாடுகிறேன் கேளுங்கள்.

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா சரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினீ)
"

"ரொம்ப நல்லா இருக்கு அப்பா இந்தப் பாட்டு. தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து வருது இந்தப் பாட்டுல"

"ஆமாம் தங்கம்மா. இரண்டு மொழிகளும் இந்தப் பாடலில் வந்திருக்கின்றன. மணியும் பவளமும் போல"

"இந்தப் பாட்டுக்கு பொருளும் சொல்லுங்க அப்பா. அப்பத் தான் பாடம் பண்றதுக்கு எளிதா இருக்கும்"

"சரி தான் அம்மா. இதோ சொல்கிறேன் கேள்.

உஜ்ஜயினி என்று ஒரு ஊர் மத்திய பிரதேச மாகாணத்தில் இருக்கிறது. விக்கிரமாதித்தன் எழுப்பியது. அங்கிருக்கும் காளி தேவியின் திருப்பெயரும் உஜ்ஜயினி என்பதே. அந்த அன்னையின் கோவிலையும் அவனே எழுப்பினான். தாயின் பெயரையே ஊருக்கும் வைத்தான்.

உஜ்ஜயினி என்றால் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுபவள்; மீண்டும் மீண்டும் வெற்றி தருபவள். கொற்றம் என்னும் வெற்றியைத் தரும் கொற்றவை அவளே. கொற்றவை என்னும் தமிழ்ப் பெயரின் வடமொழி வடிவம் உஜ்ஜயினி எனலாம்.

என்றைக்கும் மங்கள வடிவாக இருப்பவள் என்பதாலும் என்றைக்கும் மங்களத்தைத் தருபவள் என்பதாலும் அவளுக்கு நித்ய கல்யாணி என்று பெயர்."



"அப்பா. அப்படியென்றால் உஜ்ஜய காரண என்பதற்கு மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவதற்குக் காரணமான என்று பொருளா?"

"அப்படியும் சொல்லலாம் தங்கம்மா. ஆனால் இந்த இடத்தில் உஜ்ஜய என்பதற்கு உய்வு என்ற பொருளே பொருத்தம். நம் அனைவரின் உய்விற்குக் காரணமானவள் அன்னை. அவள் சங்கரனின் தேவி.

அவளே உமாவாகவும் சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் இருக்கிறாள்."

"மாமா. ஸா என்று ஒரு எழுத்தைச் சொல்லியிருக்கிறீர்களே. அப்படியென்றால் என்ன?"

"பொன்னுரங்கம். ஸா என்றால் அவள் என்று பொருள். அவளே சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் பார்வதியாகவும் இருக்கிறாள்.

மஹேசுவர தேவனாம் சிவபெருமானின் தோழி நம் அன்னை. அவள் திருவடிகளுக்கு வாழி என்று சொல்லும் பனுவல்களைப் புனைந்து அந்தத் திருவடிகளை வணங்குவோம்.

கலியுகம் இந்த உலகத்தில் இருந்து நீங்கி சத்ய யுகம் மீண்டும் வருவதற்கு உரிய வழியை நம் மனத்தில் நிலை நிறுத்தி அந்த வழியில் நாம் செல்லும் திறத்தை நமக்கருள் செய்யும் உத்தமி நம் உஜ்ஜயினி நித்யகல்யாணி.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி"

"அப்பா. இந்தப் பாடலை நீங்கள் பாடிய முறையிலேயே பாடி மனனம் செய்கிறோம்"

Saturday, October 04, 2008

கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் வேண்டும்!


எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே!


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் முக்குறுணி விநாயகர் திருமுன் இந்தப் பாடல் தான் நினைவிற்கு வரும். என் நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தப் பாடலைச் சொல்லித் தான் முக்குறுணி பிள்ளையாரை வணங்கி வருகிறேன். அந்தப் பிள்ளையாரின் திருவுருவப் பெருமைக்கு ஏற்ற பெரிய பெரிய பொருட்களை வேண்டும் பாடல் இது.

இந்தப் பாடலில் இருக்கும் உரிமை பாரதியாரின் தனித்தன்மை. சொல்லடி சிவசக்தி என்று இன்னொரு பாடலில் பாடுவதைப் போல் இங்கே கடவாயே என்று கணபதிக்குக் கட்டளை இடுகிறார். எனக்கு வேண்டும் வரங்களை சொல்வேன் என்று சொல்லாமல் இசைப்பேன் என்கிறார். தான் கேட்பவை எல்லாம் மிகப்பொருத்தமானவை; பொருத்தமானவற்றைக் கேட்கிறானே பாரதி என்று விநாயகர் மிகவும் மகிழ்வார் என்பதைப் போல் இருக்கிறது அது.

வேதங்களும் இதே உரிமையுடன் தானே எல்லா வரங்களையும் கேட்கிறது. அந்த வேதங்களைக் கீதங்களாக இசைக்கிறோமே. அதே போல் இந்தப் பாடலும் வேதகீதமாக இசையுடன் விளங்குகிறது போலும்.

மிகக்கடினமானது எது என்றால் மனத்தின் சலனத்தை நிறுத்துவது தானே. ஆழ்ந்து உறங்கும் போது அரச மரத்து இலையைப் போல் சலனத்துடனே அசைந்து கொண்டே இருப்பது தானே மனம். அப்படிப் பட்ட மனம் சலனம் இன்றி இருப்பதே முதல் வரமாகக் கேட்கிறார் பாரதியார்.

மனம் சலனப்படும் போதெல்லாம் அதனை நல்வழிப்படுத்துவது அறிவு. சில நேரங்களில் தத்துவங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு அந்த மதியில் இருள் கவிழ்ந்துவிடும். அந்த நேரங்களில் மனத்தை வழி நடத்தவேண்டிய அறிவும் வழி தவறிச் செல்லும். அதனால் தான் அந்த மதியில் இருளே தோன்றாமல் என்று தெளிவுடன் இருக்க வேண்டும் என்று கேட்கிறார் போலும்.

மனம் அசைவற்றும் மதி இருளற்றும் இருந்தால் நினைக்கும் போது நினைத்ததை நடத்தலாம். அனைத்துச் செயல்களைச் செய்தாலும் எந்த வித அலட்டலும் இல்லாமல் மௌனமாக இருக்கலாம். அந்த மௌன நிலை தமக்கு வேண்டும் என்கிறார் பாரதியார்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளிலார்க்கு? இவ்வுலகம் இல்லை. உலகப் பட்டறிவின் மொத்தமான முடிவு அது தானே. அந்தப் பொருள் கனக்கும் படி வேண்டும். அத்துடன் நூறு வயது ஆயுளும் வேண்டும்.

முதல் மூன்று வரங்கள் துறவிகள் கேட்பது போல் இருக்க கடைசி இரு வரங்களில் வேதங்கள் கேட்பதைப் போல் கேட்கிறார் பாரதியார்.

Thursday, September 11, 2008

பேயாய் உழலும் சிறுமனமே!


இன்று பாரதியின் நினைவு நாள். அவனது நினைவு நாளில் அவனது அழகான கவிதைகளில் ஒன்றை - பலரும் அறியாத கவிதைகளில் ஒன்றை - எடுத்துப் படித்துப் பார்ப்பது தான் அவனது நினைவிற்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலி என்று எண்ணுவதால் இதோ அவன் எழுதிய 'மனதிற்குக் கட்டளை' என்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறு கவிதை.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
தாயாம் சக்தி தாளினிலும்
தருமம் என யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.


இந்தப் பாடல் மிக எளிமையான பாடல். மனம் என்பது அறிவு சொல்வதைக் கேட்காமல் உழலுவதை வேறு யாரும் சொல்லி நமக்குத் தெரிய வேண்டியதில்லை. எல்லோருக்கும் அந்த அனுபவம் உண்டு. அதனால் பாரதி தன் மனத்திற்குச் சொல்லும் இந்தக் கட்டளையை ஒவ்வொருவரும் தம் தம் மனத்திற்குச் சொல்லும் கட்டளையாகவும் அமைவது இயற்கை.

நம் மனம் தான் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருள், அதிலிருந்து வேறொரு பொருள் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறதே. சொல்லும் சொல்லை கேட்கிறதா என்ன? நல்லது இது; இதனைக் கொள்ளுவாய் என்றால் கேட்காமல் அதிலிருந்து நழுவுகிறது. இதை விட்டுவிடு என்றால் கேளாமல் அதிலேயே போய் விழுகின்றது. எதாவது புதுமையைக் கண்டால் அதனைப் பெற விரும்புகிறது. அது கிடைக்குமோ கிடைக்காதோ என்று அஞ்சுகிறது. சில நேரங்களில் புதுமையைக் கண்டவுடன் நமக்கு அது தீங்கு செய்துவிடுமோ என்று அஞ்சுகிறது. எத்திசையில் போகக் கூடாது என்று அறிவு சொல்கிறதோ அவ்வழியிலேயே அழைத்துச் செல்கிறது. அதனால் தான் பாரதி 'பேயாய் உழலும் சிறு மனமே' என்று விளிக்கிறான் போலும்.

ஆனாலும் அதற்கு இன்னொரு முறை அறிவுரை சொல்லிப் பார்க்கிறான். 'னினது தலைவன் நானே; நான் சொல்லுவதைத் தான் இனி மேல் நீ கேட்க வேண்டும்' என்று மிரட்டிப் பார்க்கிறான். 'அன்னை பராசக்தியின் திருவடிகளிலும், இதுவே சரி என்று நான் குறிப்பதிலும் மட்டுமே நீ ஓயாது நிற்க வேண்டும்' என்று கட்டளை இடுகிறான். 'எதற்கு நான் இதைச் செய்யவேண்டும்?' என்று எப்போதும் போல் திமிறி ஓடுமே - அதற்கு விடையாக 'சொல்லிவிட்டேன். உன் தலைவனான என் சொல் கேட்டு அடங்கி நடந்து கொண்டாய் என்றால் நீயும் உய்வாய். அதனால் நானும் உய்வேன்' என்று சொல்கிறான்.

Wednesday, February 27, 2008

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்!

எந்தத் தருணத்தில் பாரதியார் இந்தப் பாடலை எழுதியிருப்பாரோ என்று பல முறை எண்ணுவதுண்டு. பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று எழுதி அதில் வலுவான பல காரணங்களை அடுக்குவதற்குத் தகுந்த தருணமாக எது இருந்திருக்கக் கூடும். 'வாய்ச்சொல்லில் வீரரடி' என்று மிதவாத பேராயக் கட்சியினரைப் பழித்த பாரதியார் பின்னர் 'வாழ்க நீ எம்மான்' என்று மிதவாதிகளின் தலைவரைப் போற்றும் வகையில் மனமாற்றம் பெற்ற போது எழுதப்பட்டப் பாடலாக இருக்கலாம் என்றொரு ஊகம் உண்டு.

புகை நடுவினில் தீ இருப்பதைப் போல் பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் இருக்கிறான் என்று சொல்வது முதற்கொண்டு வாழ்க்கையில் என்னைப் பலமுறை சிந்தை செய்யத் தூண்டிய பல கருத்துகள் இந்தப் பாடலில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக என் விளக்கத்தைச் சொல்ல நினைத்தாலும் அது நுனிப்புல் மேய்வதாகவே அமையும். ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட இந்தப் பாடலைப் படிப்பவர்கள் என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்
(பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? - நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? - நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ?
(பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் - நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? - நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ?
(பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)

Friday, November 30, 2007

காலைப் பிடித்தேன் கணபதி


காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனமெனும் நாட்டில் நிறுத்தல் குறியெனக்கே

மூன்று வேண்டுதல்களை இந்தப் பாட்டில் வைக்கிறார் பாரதியார். பற்பல நூற்களைச் சமைக்க வேண்டும். நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாமல் நல்ல வினைகள் செய்ய வேண்டும். கணபதியின் ஆட்சியை மனத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

சரணாகதியில் இரு விதம் சொல்லுவார்கள். 'எனக்குக் குழப்பம் மிகுந்து விட்டது. அதனால் எது சரி எது தவறு என்பது புரியவில்லை. உன் சீடனாகச் சரணடைகிறேன்' என்று கூறி கண்ணனை அருச்சுனன் சரணடைந்தானே அது ஒரு வகை சரணாகதி. எல்லா நெறிகளையும் சொல்லிவிட்டு விஸ்வரூப தரிசனமும் காட்டிவிட்டு தனது பெருமைகளை எல்லாம் விவரித்து விட்டு கடைசியில் 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னையே சரணாக அடைவாய்' என்று கண்ணன் சொல்ல அதற்கு ஏற்ப அருச்சுனன் செயுயாமல் செய்கிறானே அது இன்னொரு வகை சரணாகதி.

இங்கே வேண்டுதல்களை வைக்கும் முன் 'காலைப் பிடித்தேன் கணபதி' என்கிறார் பாரதியார். இங்கே காலைப் பிடிக்கிறாரே அது மேலே சொன்ன இரு வகை சரணாகதியில் எந்த சரணாகதி என்று தோன்றுகிறது?

தன்னலம் மிக்கதோரு தருணத்தில் இறைவன் காலைப் பிடிப்பது முதல் வகை. அப்படியா இங்கே பாரதியார் செய்கிறார்? மேலோட்டமாகப் பார்த்தால் அவர் ஒரு புலவர்; அதனால் பல நூல்களைச் சமைக்க வேண்டும் என்று தன்னலத்துடன் வேண்டுவதாகத் தோன்றுகிறது. அப்படி பல நூல்களைச் சமைக்கும் போது அவற்றில் எந்த வேலைத் தவறும் நிகழாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் வைக்கிறார்; அதுவும் தன்னல வேண்டுதலாகத் தோன்றுகிறது. ஆனால் கடைசி வரியைப் பார்த்தால் அவர் தன்னல வேண்டுதல் வைப்பதாகத் தோன்றவில்லை. உன் ஆட்சி என் மனத்தில் நிலைக்க வேண்டும் என்று சொல்லும் போதே 'மன் மனா பவ; மத் யாஜி - என்னையே மனத்தில் வை. என்னை வணங்கு' என்றெல்லாம் கீதையில் கண்ணன் சொன்னானே அவை பிரதிபலிப்பது போல் தோன்றுகிறது.

இறைவனின் ஆட்சி மனத்தில் நிலைபெற்றால் 'செய்யும் தொழில் உன் தொழிலே; சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறாரே அது போல் இறைவனின் கருவியாக இவ்வுலகத்தில் செயலாற்றிட முடியும். அப்படிச் செயலாற்றும் போது செய்யும் செயல்களில் தவறு நடக்காது. செயல்களும் பல மடங்கு நடக்கும். 'யோக: கர்மஸு கௌசலம் - யோகம் என்பது செய்யும் செயல்களில் முழுமை' என்று கண்ணனும் கீதையில் சொல்கிறான்.

ஆக, இந்தப் பாடலில் கணபதி காலைப் பிடித்த போது இரண்டாவது வகை சரணாகதையைத் தான் பாரதியார் செய்வதாகத் தோன்றுகிறது. பின்னர் வைக்கும் வேண்டுதல்கள் அதனை உறுதி செய்கிறது. அவன் அரசாட்சியில் மனத்தில் நிலை நிறுத்த வேண்டும்; அதனால் நூல்கள் பல பலவாய் செய்யப்படும்; நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாதிருக்கும்; நல்ல வினைகள் செய்யப்படும். இதுவே எனக்குக் குறி. இவற்றை எல்லாம் செய்யம் நாமும் கணபதியின் தாளினை கண்ணில் ஒற்றிக் செயல்கள் செய்வோம்.

Wednesday, November 21, 2007

கணபதியைப் போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்


உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்குப்
புணர்வீர் அமரர் உறும் போகம் - கணபதியைப்
போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்

அறிவொன்றே தெய்வம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துபவர் பாரதியார். சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுபவர். இறைவன் அறிவு மயமாக இருக்கிறான் என்பது ஆன்மிகம் மீண்டும் மீன்டும் வலியுறுத்தும் கருத்து. எந்த அறிவைப் பெற்ற பின் வேறு எதுவும் தெரிய வேண்டியதில்லையோ அந்த அறிவே பிரம்மம் என்று வேதங்களும் பேசும். அந்த அறிவு அன்பின் அடிப்படையில் ஆன அறிவாக இருக்கும் போது இன்னும் மேன்மை. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் என்று அன்பு, சிவம், அறிவு மூன்றையும் ஒரே மூச்சில் இணைப்பார் திருமூலர். அப்படி அன்பும் அறிவும் இணைந்த உருவாக கணபதியைப் போற்றிப் பணிந்திடுங்கள் என்று இங்கே சொல்கிறார்.

இதனை ஏன் 'உணர்வீர் உணர்வீர்' என்று இருமுறை சொல்லி வலியுறுத்தவேண்டும்? உலகத்தவர் எல்லா போகங்களையும் தேடி அலைகின்றார்கள். அதனை எந்த முறையிலேனும் அடைந்து விடத் துடிக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம் ஒரு முறைக்கு இருமுறை வலியுறுத்தினாலாவது கேட்க மாட்டார்களா என்று நினைத்தார் போலும்.

கணபதியை போத வடிவாகப் போற்றிப் பணிந்தால் 'இனி மேல் என்றோ ஒரு நாள் வருங்காலத்தில்' அமரர்கள் அடையும் இன்பத்தை அடையலாம் என்று சொல்லவில்லை அவர். இங்கேயே இப்போதே அமரர் உறும் போகத்தை புணரலாம் என்று அறுதியிடுகிறார். அறிவொன்றே தெய்வம் என்ற தெளிவு வந்த பின் வேறெதையும் தேடி அலையாத மனம் கிடைத்துவிடுமே. அந்த நிலை அடைந்தால் ஆனந்தம் தானே வருமே. அதனால் 'இனி மேல்' என்றோ 'வேறுலகில்' என்றோ சொல்லாமல் இங்கேயே புணர்வீர் என்று சொல்கிறார்.

அறிவுடன் இருப்பது என்பது இறைவனுக்கு உருவம் உண்டா என்ற கேள்வியை எழுப்புவது என்றதொரு கருத்து வலிவுடன் இருக்கிறது. எல்லா உருவங்களும் ஆன இறைவனுக்கு ஓருருவம் ஒரு பெயர் என்று கற்பித்தல் மட்டுமே தவறு; ஆயிரம் உருவங்களும் ஆயிரம் பெயர்களும் இருப்பது இயற்கை. அதுவே பகுத்தறிவாக இருக்க முடியும். அறிவு வடிவமாக கணபதியைப் போற்றுங்கள் என்னும் போது அந்த அறிவு உருவமான தெய்வத்திற்கு 'உருவம்' உண்டு என்பதைக் காட்டுவது போல் 'மென்மையான மலர்க்கால்களை'ப் பணிந்திடுங்கள் என்று சொல்கிறார்.

எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக இன்னொன்றையும் சொல்லுகிறார். கண்பதியை அறிவு வடிவாகப் போற்றிப் பணிந்திட்டால் மட்டுமே போதுமா? முக்கியமான ஒன்று குறைகிறதே. அந்த ஒன்று இருந்தால் தானே நிறைவு பெற முடியும். காதலுடன், அன்புடன், பக்தியுடன் அவன் திருவடிகளைத் தொழ வேண்டும் என்கிறார். அந்தக் காதல் இன்றி அறிவே உயர்ந்தது என்று எவ்வளவு தான் கூறினாலும் அது தெய்வத்தைத் தொழுவது ஆகாது. அன்புடன் கூடிய அறிவே தெய்வம் என்பதை மீண்டும் இங்கே ஒரு முறை வலியுறுத்துகிறார்.

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். நான்காம் பாடல் இஃதுணர்வீரே என்று நிறைய இந்தப் பாடல் உணர்வீர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கால் என்று நிறைய அடுத்தப் பாடல் காலைப் பிடித்தேன் என்று தொடங்கும். இந்தப் பாடல் வெண்பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: உணர்வீர் - புணர்வீர் - கணபதியை, போதவடிவாக - காதலுடன்.

மோனை: உணர்வீர் - உணர்வீர் - உலகத்தீர், புணர்வீர் - போகம், போத - போற்றி - பணிந்திடுமின், காதலுடன் - கஞ்சமலர் - கால்.